தனிப்பட்ட காரணங்களுக்காக பயணம் – மீண்டும் வெளிநாடு சென்ற ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட காரணங்களுக்காக ஐரோப்பா பயணமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகுல் காந்தி கடந்த மே மாதம் தொடக்கத்தில் நேபாளம் சென்றார். அங்கு ஓர் இரவு விடுதியில் அவர் இருந்தது சர்ச்சைகளை கிளப்பியது. பின்பு அதே மாதம் இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மே மாதம் இந்தியாவின் பல மாநிலங்களில் ராஜ்ய சபா தேர்தல் நடந்துகொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி இதில் இடங்களை தக்கவைப்பதில் தடுமாறி கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ராகுல் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்தது அவரின் சொந்தக் கட்சிக்குள்ளேயே விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ராகுல் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இம்முறை ஐரோப்ப நாடுகளுக்கு தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றுள்ளார் என்று வடஇந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தால் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய கூட்டங்களை தவறவிடுவார் எனத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது காங்கிரஸ். அதேபோல், அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கப்படும் காங்கிரஸின் யுனைட் இந்தியா பிரச்சாரத்துக்கான ஆலோசனை கூட்டம் வரும் வியாழன் நடக்கவுள்ளது. முக்கியமான இந்த இரு கூட்டங்களையும் ராகுல் தவறவிடவுள்ளார் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேநேரம் என்னக் காரணத்துக்காக ராகுல் ஐரோப்பா சென்றுள்ளார் என்பது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.