தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று வேகமாக அதிகரித்துவருவது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 31-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, “ தமிழகத்தில் 94.68 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 85.74 சதவிகிதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளார்கள். கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவிகிதம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து சதவிகிதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் 10 சதவிகிதம் பேருக்கு அதிகமாக தொற்று உறுதி செய்யப்பட்டாலோ, தொற்று பாதிப்பு 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே ஊரடங்கு தேவை. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது ஐந்து சதவிகிதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறனர். அதனால், ஊரடங்கு தேவை கிடையாது.
தமிழகத்தில் தடுப்பூசி காரணமாக 88 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்க ஏற்பாடு நடைபெற்றுவருகிறது. விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவத்துறையில் செவிலியர்கள், மருத்துவர்கள் என்று காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்” என்று பேசினார்.