திருமணங்கள் நடைபெறும் விதம் சமீப காலங்களில் மிகப்பெரிய மாற்றங்களை அடைந்துள்ளது. கூடவே, திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் துணையின் மீது வைக்கும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. திருமணத்தின் ஆகப்பெரிய உறுதிமொழியே ‘ஒருவருக்கு ஒருவர் துணையாக, வாழ்நாள் முழுதும் இன்ப துன்பங்களில் ஒன்றாகக் கடப்போம்’ என்பதே. ஆனால் இங்கு ஒரு திருமண ஜோடி போட்டுள்ள ஒப்பந்தம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
விஜய் மற்றும் சிம்ரன் நடித்த ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் அக்ரிமென்ட் கல்யாணத்தைப் பார்த்திருப்போம். அதேபோல் அசாமை சேர்ந்த சாந்தி மற்றும் மிண்டு என்ற திருமண ஜோடி ஒப்பந்தம் (கான்ட்ராக்ட்) போட்டு கல்யாணம் செய்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் இருவரும் கையொப்பம் இடும் வீடியோவை வெட்லாக் போட்டோகிராபி (wedlock photography) , தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டது.
அப்படி இவர்கள் என்னதான் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என வியப்பாக இருக்கிறதா…? “மாதத்திற்கு ஒரு முறை தான் பீட்சா, கண்டிப்பாக தினந்தோறும் சேலை உடுத்த வேண்டும், தினமும் ஜிம் செல்ல வேண்டும், எல்லா பார்ட்டிகளிலும், நல்ல புகைப்படங்களை எடுக்க வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை ஷாப்பிங் செல்ல வேண்டும், இரவு நேர பார்ட்டிகளை என்னோடு மட்டுமே நடத்த அனுமதி போன்ற 8 அம்ச ஒப்பந்தத்தில் ஜோடிகள் இருவரும் கையெழுத்திட்டனர். சாட்சி கையெழுத்துகளும் அதில் இடம்பெற்று இருந்தன.
இந்த வீடியோ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, ஒப்பந்தங்கள் குறித்த கமென்டுகளும் குவிந்து வருகின்றன. சுமார் 40 மில்லியன் வரை இந்த வீடியோ மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.