எல்பின்’ என்ற தனியார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தவர் ரமேஷ்குமார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சு ஊடக பிரிவின் மாநில துணை செயலாளராக இருந்துள்ளார். எல்பின் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில், முதலீட்டு திட்டங்கள், ஆன்லைன் மார்க்கெட்டிங் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தது.
இந்நிறுவனத்தில் இன்னொரு இயக்குனராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில துணை செயலாளராக ராஜாவும் செயல்பட்டு வந்தார் .
இந்த தனியார் நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பல கோடிகளை முதலீடு செய்ய கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து பல கோடி ரூபாயை வசூலித்து விட்டு, கம்பெனி திவால் என இயக்குனர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
இதன் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று எல்பின் நிறுவனத்தின் இயக்குனர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் வீடு உள்பட திருச்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் அதிகாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினருமாக செயல்பட்டு வரும் பிரபாகரன் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது மாமியார் வீட்டில் கடலூர் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த எம்பி தேர்தலின் போது போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதிக்கு பணப்பட்டுவாடா செய்ய ரெண்டு கோடிக்கு மேல் பணம் கொண்டு சென்றதற்கான வழக்கும் இவர் மேல் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
க. சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“