பீகார் மாநிலம் சமஸ்திபூரில் ருபாலி உயர்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள சைத்பூர் ஜாஹித் கிராமத்தில் உள்ள மின்சார கோபுரத்தில் பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை துவக்கினர். உயிரிழந்தவர் உமாதேவி என்பதையும் அவருக்கு திருமணமாகி மகன் இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.
மகனிடம் நடத்திய விசாரணையில் தனது தந்தைதான் அவரை கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. “திருமணத்தை மீறிய பல உறவுகள் வைத்திருந்ததற்கு எனது தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால், எனது தந்தை அவரைக் கொன்றார்.” என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரைக் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். தற்போது அவரை கைது செய்துள்ளனர் போலீசார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM