Shiv Sena to support NDA presidential nominee Droupadi Murmu, says will do ‘what is right’: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்குமாறு சிவசேனா கட்சியின் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தலைவர் உத்தவ் தாக்கரேவை வலியுறுத்திய ஒரு நாள் கழித்து, சிவசேனா கட்சி செவ்வாயன்று அவரை ஆதரிப்பதாகக் குறிப்பிட்டது, ஆனால் அது பா.ஜ.க.,வை ஆதரிப்பதாக அர்த்தமல்ல என்றும் தெரிவித்துள்ளது.
“சிவசேனா எது சரி என்று நினைக்கிறதோ அதைச் செய்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் வேட்பாளர் டி.என்.சேஷன் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான பிரதீபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். அரசியலுக்கு அப்பாற்பட்ட பாரம்பரியத்தை சிவசேனா கொண்டுள்ளது. தேசிய நலனுக்காக மக்களை ஆதரிப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: உபேர் அபாய பொத்தான்: காரில் காட்சிப் பொருள்; காகிதத்தில் மட்டுமே இருக்கும் பாதுகாப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா தயாராகி வருகிறதா என்று குறிப்பாகக் கேட்டதற்கு, இது தொடர்பான முடிவை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விரைவில் அறிவிப்பார் என்று சஞ்சய் ராவத் கூறினார். மேலும், “இன்று அல்லது நாளை, நீங்கள் முடிவை எதிர்பார்க்கலாம்,” என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.
”தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், திரௌபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கும் முதல் பழங்குடிப் பெண் ஆக இருப்பார். மகாராஷ்டிராவில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர். பழங்குடியினர் பகுதிகளில் இருந்து வரும் சிவ சைனியர்கள் அதிகம். பழங்குடியின எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்,” என்று சஞ்சய் ராவத் கூறினார்.
அதேநேரம், “திரௌபதி முர்முவை ஆதரிக்கும் முடிவு என்பது, நாங்கள் பா.ஜ.க.,வை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமல்ல” என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.
“[திங்கட்கிழமை] கூட்டத்தில் நடந்த விவாதங்களுக்குப் பிறகு, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இது குறித்து ஒரு முடிவை எடுப்பார், மேலும் அவர் எந்த அழுத்தத்தின் கீழும் முடிவை எடுக்க மாட்டார். அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்,” என்று சஞ்சய் ராவத் கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கட்சிக்கான கொறடா உத்தரவு எதுவும் வெளியிடப்படாததால் எம்.பி.க்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம்.
திங்களன்று உத்தவ் தாக்கரே அழைத்த கூட்டத்தில், பெரும்பான்மையான எம்.பி.க்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என்று கூறினர். அதேநேரம், ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் பாவனா கவ்லி ஆகிய இரு எம்.பி.க்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று சஞ்சய் ராவத் கூறினார்.
உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான சிவசேனா தலைவர் ஒருவர் கூறும்போது, “நேற்று எம்.பி.க்களுடன் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவளிக்க எங்கள் கட்சித் தலைவர் முடிவு செய்துள்ளார். பழங்குடியின தலைவர் ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்று கட்சி எம்.பி.க்கள் விரும்பினர். அதில் தவறில்லை. இதற்கு முன்னரும், சிவசேனா எந்தக் கட்சியில் இருந்து வந்தாலும் சரியான வேட்பாளரை ஆதரித்துள்ளது,” என்று கூறினார்.
கூட்டத்திற்குப் பிறகு, சிவசேனா எம்.பி கஜானன் கிர்த்திகர், குடியரசு தலைவர் வேட்பாளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை ஆதரிக்குமாறு கட்சித் தலைவரிடம் வலியுறுத்தியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மேலும், “திரௌபதி முர்மு தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக இருந்தாலும், அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் ஒரு பெண். அவருக்கு சிவசேனா ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெரும்பாலான எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். எங்கள் கட்சித் தலைவர் ஓரிரு நாட்களில் முடிவெடுப்பார்” என்றும் கஜானன் கீர்த்திகர் கூறினார்.
முன்னதாக, சிவசேனா எம்.பி ராகுல் ஷெவாலே, திரெளபதி முர்முவுக்கு ஆதரவளிக்குமாறு உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
திரெளபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் சுதிர் முங்கண்டிவார், “நாங்கள் அதை முழு மனதுடன் வரவேற்போம்” என்று கூறினார்.