இலங்கையில் கடும் நெருக்கடி நிலையினால் மக்கள் கொதித்து போயுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சநாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற போது, விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். நாட்டின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக பெரிய அளவில் எதிர்ப்பு வெடித்ததை தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை பதவி விலகுவதாக உறுதியளித்தார். ஆனால், அதிபர் பதிவியில் இருந்து விலகினால், தான் உடனடியாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அவர் நாட்டை விட்டு எப்படியாவது தப்பி செல்ல முயற்சி செய்து வருகிறார்.
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை சனிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சூரையாடுவதற்கு சற்று முன்பு, 73 வயதான கோத்தபய அதிபர் மாளிகையை விட்டுவெளியேறினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிபர் பதவியில் இருந்து விலகினால் தான் உடனடியாக, கைது செய்யப்படலாம் என்பதால், ராஜினாமா செய்வதற்கு முன் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், குடிவரவு அதிகாரிகள் பாஸ்போர்ட்டை முத்திரையிட மறுத்துவிட்டனர்.
மேலும் படிக்க | எனக்கு இருந்தது ஒரே வீடு தான்… கண் கலங்கிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
விமான நிலையத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்லும் நான்கு விமானங்களும் புறப்பட்டு சென்றதை அடுத்து பின்னர், கோத்தபய ராஜபக்சேவும் அவரது மனைவியும் பிரதான சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இராணுவ தளத்தில் இரவைக் கழித்தனர்.
ராஜபக்சேவின் இளைய சகோதரரும் முன்னாள் நிதியமைச்சரும் ஆன பசில் ராஜபக்ச, செவ்வாய்க்கிழமை அதிகாலை துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் செல்ல விரும்பிய போது, குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்ற பசில், சனிக்கிழமையன்று மக்கள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ராஜபக்சேக்கள் அவசரமாக மாளிகையை விட்டு வெளியேறிய போது, புதிய கடவுச்சீட்டைப் பெற முயன்றதாக என்று இராஜீய வட்டாரம் தெரிவித்துள்ளது.
அதிபர் மாளிகையில், சுமார் 17.85 மில்லியன் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் நிரம்பிய சூட்கேஸ் ஆகியவை விட்டுச் செல்லப்பட்டுள்ளன என்றும் இந்த பொருட்கள் தற்போது கொழும்பு நீதிமன்றத்தின் வசம் உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் இன்னும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கும் நிலையில் அதிபரின் நிர்வாகம் அவர் இருக்கும் இடம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், கோத்தபய ராஜபக்ச இந்தியா அல்லது மாலத்தீவுக்கு தப்பிச் செல்ல செய்ய கடற்படைக் கப்பலைப் பயன்படுத்தலாம் என ஆதாரங்கள் தெரிவித்தன.
ராஜபக்சேவின் பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடையும் நிலையில், ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தால், நாடாளுமன்றம் ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தானாகவே அதிபராகப் பொறுப்பேற்பார்.
நாட்டின் மிக அடிப்படையான இறக்குமதிகளுக்குக் கூட வெளிநாட்டு நாணயம் இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததாக ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதனால் அங்கு வசிக்கும் 22 மில்லியன் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை பதவி விலகாவிடில், வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கடுமையாக எச்சரித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கருத்துரைக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.