தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராணி மகராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர், நாடார் மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து மரிய நிர்மலாதேவி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மரிய நிர்மலாதேவி, ஆறுமுகநேரி பேரூராட்சியில் 14-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். சரவணக்குமருக்கு அம்மன்புரத்தில் சொந்தமாக நிலங்கள் உள்ளது.
இன்று காலை அங்குள்ள ஒரு டீக்கடைக்குச் சென்று பைக்கினை நிறுத்தியுள்ளார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், சரவணக்குமாரை அரிவாளால் வெட்ட வந்தனர். பின்னர், அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்காக அருகில் உள்ள ஒரு வாய்க்காலில் குதித்தார். ஆனால், அவரால் அங்கிருந்து தப்பி ஓடிச் செல்ல முடியவில்லை. இதனையடுத்து 3 பேர் கொண்ட கும்பல், சரவணக்குமாரின் தலை, வயிறு மற்றும் கைகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதனால், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் உயிரிழந்தார்.
சரவணக்குமாரின் தம்பி வேல்குமார் கடந்த 2019-ல் கொலை செய்யப்பட்டார். மேலும், ராணிமகாராஜபுரத்தில் உள்ள அம்மன் கோயிலை யார் நிர்வகிப்பது என்பது தொடர்பாகவும், நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தல் தொடர்பாகவும் சரவணக்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அம்மன்புரத்தில் உள்ள நிலப்பிரச்னை தொடர்பாகவும் சிலருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.
உயிரிழந்த சரவணக்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கொலைக்கு என்ன காரணம் என குரும்பூர் காவல் நிலையப் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலைச் சம்பவத்தின் எதிரொலியாக ராணிமகாராஜபுரம் மற்றும் அம்மன்புரம் ஆகிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் அங்கு பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலைச் சம்பவம் நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.