அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை
தேவையான நிதி கிடைக்கப் பெற்றாலும் தேர்தலை நடத்த நான்கு மாத அவகாசம் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போதைய சூழ்நிலை தேர்தலை நடத்துவதற்கு உசிதமானதல்ல எனவும் அவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த வேண்டுமாயின் முதலில் மக்கள் எதிர்நோக்கி வரும் எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றப் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு அதிக செலவு
அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ள காரணத்தினால் தேர்தலை நடத்துவதற்கு ஆயிரம் கோடி ரூபாவை விடவும் கூடுதல் தொகை பணம் தேவை என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் வழங்கினாலும் எரிபொருள் உள்ளிட்ட ஏனைய வசதிகளும் கிடைக்கப் பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த சூழ்நிலையில் வேட்பாளர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டு மக்கள் மத்தியில் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியே என்றும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.