கலபுரகி, : ஷஹபாத் நகராட்சி தலைவியின் கணவரும், காங்கிரஸ் தலைவருமான கிரிஷ் கம்பானுரா, 42, மர்ம கும்பலால், நேற்று வெட்டி கொல்லப்பட்டார்.கலபுரகியின் ஷஹபாத் நகரின் காங்கிரஸ் தலைவர் கிரிஷ் கம்பானுரா, 42. இவரது மனைவி அஞ்சலி, தற்போது ஷஹபாத் நகராட்சி தலைவராக உள்ளார். கிரிஷின் தந்தை, இதற்கு முன் நகராட்சி உறுப்பினராக பணியாற்றினார்.ஷஹபாத் ரயில் நிலையம் அருகில், நேற்று மதியம் கிரிஷ் அமர்ந்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. சம்பவத்துக்கு பயன்படுத்திய, இரண்டு அரிவாளில் ஒன்று, அவரது வயிற்றுப் பகுதியில் சிக்கியிருந்தது.ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். கிரிஷின் உயிருக்கு ஆபத்து இருந்ததால், சமீப நாட்கள் வரை இரண்டு தனியார் கன் மேன்களை, பாதுகாப்புக்கு வைத்திருந்தார். அதன்பின் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கிடைத்ததால், கன் மேன்களை பணியிலிருந்து விடுவித்தார்.
துப்பாக்கியை எப்போதும், தன்னுடன் வைத்திருப்பார். ஆனால் அரிவாளுடன் வந்த மர்ம கும்பல், அவர் துப்பாக்கியை எடுக்க வாய்ப்பளிக்காமல், தாக்குதல் நடத்தினர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கிரிஷின் அண்ணன் சதீஷ் கம்பானுராவும் கூட, கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement