புதுடெல்லி: அக்னிபாதை திட்டம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழு எம்பிக்களுக்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிபாதை திட்டம் கடந்த 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அக்னிபாதை திட்டம் குறித்து பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தலைமை தளபதிகள், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் உள்ள எம்பி.க்களிடம் நேற்று ஏறக்குறைய 2 மணி நேரம் விளக்கம் அளித்தார். கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அக்னிபாதை திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினர். மேலும், திட்டத்தை திரும்பப் பெறக் கோரி பாதுகாப்பு அமைச்சரிடம் எழுத்துப்பூர்வ மனு கொடுத்தனர். ஆனால் இந்த மனுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கையெழுத்திடவில்லை. ‘அக்னிபாதை திட்டம் மிகவும் தேவையான சீர்திருத்தம். பல்வேறு நாடுகளின் ஆயுதப்படைகள் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளன,’’ என்று வெளிப்படையாக பாராட்டினார் வரும் 18ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், எதிர்க்கட்சி எம்பி.க்களின் கவலைகளைத் தீர்க்கும் நோக்கில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.