சென்னை: ‘‘நீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம். பழனிசாமியையும், கே.பி.முனுசாமியையும் கட்சியைவிட்டுநீக்குகிறேன்’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘‘நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் கட்சியைவிட்டு நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவும் நடத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஓபிஎஸ், ‘‘அதிமுக சட்ட விதிப்படி, 1.5 கோடி தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். என்னை நீக்குவதற்கு பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை.கட்சியின் சட்டவிதிக்கு புறம்பாக, பழனிசாமியும், கே.பி.முனுசாமியும் தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிட்டதற்காக கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு, அவர்கள் 2 பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன்’’ என்றார்.
‘‘உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?’’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘நீதிமன்றத்துக்கு சென்று, தொண்டர்களோடு இணைந்து உரிய நீதியை பெறுவோம்’’ என்று கூறினார்.