முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவர் இராணுவ விமானம் ஒன்றின் மூலம் மாலைத்தீவு நோக்கி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்சவின் மோசமான நிர்வாகமே காரணம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மோசமான நிர்வாகமே காரணம் என்று பொது மக்கள் குற்றம் சுமத்திவருகின்றனர்.
நாளாந்த மின்வெட்டு மற்றும் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படைத் தட்டுப்பாடுகளால் பல மாதங்களாக பொது மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் வெடித்திருந்த நிலையில், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை என்பன கடந்த 9ம் திகதி பொது மக்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
எவ்வாறாயினும், பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13ம் திகதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.
தற்போது கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.