புதுடெல்லி: பாஜக பெண் செய்தி தொடர்பாளர் தொடர்பான ஆபாச வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். டெல்லி பாஜக பெண் செய்தித் தொடர்பாளர் குறித்து ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதையடுத்து சம்பந்தப்பட்ட பெண் செய்தி தொடர்பாளர் டெல்லி போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து புதுடெல்லி மாவட்ட சைபர் செல் பிரிவு போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின் 354ஏ, 509 மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி பெண் பாஜக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: என்னை அவதூறு செய்யும் நோக்கில் யாரோ இதுபோன்ற மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். என்னுடைய நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு கூறிய பின்னர்தான் எனக்கு தெரியவந்தது. அந்த வீடியோவை பார்த்து உறுதி செய்த பின்னரே போலீசில் புகார் அளித்தேன்’ என்றார். இதுகுறித்து புதுடெல்லி துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) அம்ரிதா குகுலோத் கூறியதாவது, ‘புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது’ என்றார்.