பிரமாண்டமாக உருவாகும் நயன்தாராவின் 75வது படம்
நடிகை நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் ஓடிடி.,யில் வெளியான 'ஓ2' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை, அண்மையில் திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் 75வது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை ட்ரைடண்ட் ஆர்ட் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தை நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.