புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இந்தப் பிரேரணை நாடாளுமன்றக் குழுவினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவினால் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்
ஜனாதிபதி இராஜினாமா செய்துள்ளதாக எதிர்வரும் 15ம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்து 20ம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் மூலம் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது. இதன்படி, ஜூலை 19ம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.