புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.
புதிய நாடாளுமன்றம் கட்ட கடந்த 2020 டிச. 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 மாடிகளுடன் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம், மத்திய செயலகம், மத்திய கருத்தரங்கு மையம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், 51 அமைச்சகங்களின் அலுவலகங்களும் நாடாளுமன்ற வளாகத்தில் கட்டப்படுகின்றன.
நாடாளுமன்ற கட்டுமான பணியை டாடா நிறுவனமும், நாடாளுமன்ற வளாக கட்டுமானப் பணியை ஷபூர்ஜி பலோன்ஜி குழுமமும் மேற்கொள்கிறது. வரும் அக்டோபர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை 80 சதவீத கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
9,500 கிலோ எடை
இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்றத்தில் பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதிய நாடாளுமன்றத்தில் தேசிய சின்னத்தை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பணியிடத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா, உணவு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்று பிரதமர் விசாரித்தார்.
மேலும் கரோனா பெருந்தொற்று காலத்தில் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார். தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கூடாரங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டார்.
தொழிலாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‘‘நீங்கள் கட்டிடம் கட்டவில்லை. உங்கள் வியர்வையால் புதிய வரலாறு படைத்து வருகிறீர்கள்’’ என்று புகழாரம் சூட்டினார்.