புராதான கட்டடக்கலைக்கு சான்று சென்னை உயர் நீதிமன்றம்: 130 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவற்றை எல்லையாக கொண்டு 160 ஆண்டுகளாக நீதிபரிபாலணை செய்துவரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரதான கட்டிடம் 130 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி சட்டம் எனப்படும் 1773 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை சட்டத்தின் படி, மேயர் நீதிமன்றங்களுக்கு மாற்றாக, 1774ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உச்ச நீதிமன்றம்  அமைக்கப்பட்டது. அதன் பின்னர் மூன்றாம் ஜார்ஜ் மன்னரால் 1800 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் ஆறாம் தேதி சென்னையிலும், 1823 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மும்பையிலும் மாகாண வாரியான உச்சநீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டம் 1861-ன் படி உச்ச நீதிமன்றங்களை கலைப்பதற்கும், மாகாணங்களுக்கான உயர் நீதிமன்றங்கள் அமைப்பதற்கும் விதிகள் உருவாக்கப்பட்டு, 1862 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம், சென்னை கடற்கரை ரயில் நிலையம் எதிரே ஏற்கனவே உச்ச நீதிமன்றம் செயல்பட்ட இடத்திலேயே செயல்பட்டு வந்தது.

image
ஜார்ஜ் டவுன் பகுதியில் தென்கோடியில் சென்னை  உயர் நீதிமன்றதிற்கு தனிக் கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அங்கு இருந்த இரண்டு கோயில்களை இடமாற்றம் செய்து, உயர் நீதிமன்ற கட்டடம் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்தோ – சாராசானிக் கட்டிடக்கலை மூலம் 1888 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் 1892 ஆம் ஆண்டு முடிவடைந்தன. இந்த கட்டிடத்தின் வடிவமைப்பை அரசின் அப்போதைய கட்டிடக்கலை ஆலோசகராக இருந்த ஜே.டபிள்யூ. பிராசிங்டன் (J W Brassinton) என்பவர் தொடங்கி, புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர்களான ஹென்றி இர்வின் (Henry Irwin), ஜெ.ஹெச்.ஸ்டீபன்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோனையுடன் நிறைவு பெற்றது.

நீதிமன்ற விசாரணை அறைகள், வழக்கறிஞர்களுக்கான அறைகள் ஆகியவற்றைக் கொண்ட கட்டிடமாக 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டத் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட பணிகள், 12 லட்சத்து 98 ஆயுரத்து163 ரூபாய் செலவில் முடிக்கப்பட்டன.

image
பின்னர்,  சென்னை மாகாணத்தின் அப்போதைய கவர்னராக இருந்த பெய்ல்பை பாரோன் வென்லாக் (Beilby Lawley, 3rd Baron Wenlock)-ஆல் 1892ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி திறக்கப்பட்டு, தலைமை நீதிபதியாக இருந்த சர் ஆர்தர் காலின்ஸ் (Sir Arthur Collins)) இடம் உயர் நீதிமன்ற கட்டிடத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது. 30 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில், புராதன கட்டிடக்கலையுடன் கூட உயர் நீதிமன்ற பிரதான கட்டடம் இன்றுடன் 130 ஆண்டுகள் நிறைவு செய்து கம்பிரமாக வீற்றிருக்கிறது.
செய்தியாளர் – முகேஷ்

இதையும் படிக்க: மதுரை டூ துபாய்: விமானத்திற்காக 16 மணி நேரம் காத்திருந்த பயணிகள் – காரணம் என்ன? Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.