பெண்கள் உலக கோப்பை ஆக்கி: ஸ்பெயினிடம் தோல்வியடைந்த இந்தியா கால்இறுதி வாய்ப்பை இழந்தது..!

தெரசா,

15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு தெரசாவில் நடந்த கால்இறுதிக்கு முந்தைய சுற்று (கிராஸ் ஓவர்ஸ்) ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் 3-வது இடம் பிடித்த இந்திய அணி, ‘சி’ பிரிவில் 2-வது இடம் பெற்ற ஸ்பெயினை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டினாலும் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிப்பதில் தடுமாறின.

ஆட்டம் முடிய 3 நிமிடம் இருக்கையில் (57-வது நிமிடம்) ஸ்பெயின் அணி கோல் போட்டது. ஸ்பெயின் அணியின் வீராங்கனை கிளாரா யார்ட்ஸ் அடித்த பந்து இந்திய அணியின் கோல்கீப்பர் சவிதா தடுத்து திரும்பியது. அதனை சக வீராங்கனை மார்டா செகு கோலுக்குள் திணித்தார். கடைசி 3 நிமிடங்களில் ஸ்பெயின் வீராங்கனைகள் கார்சியா நடுவரால் மஞ்சள் அட்டையும், மார்டா செகு பச்சை அட்டையும் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதனால் அந்த அணி 9 வீராங்கனைகளுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த அனுகூல வாய்ப்பையும் இந்திய அணி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. தோல்வி அடைந்த இந்திய அணி கால்இறுதி வாய்ப்பை இழந்தது. இந்திய அணி அடுத்து 9 முதல் 16-வது இடத்துக்கான போட்டியில் ஆடும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.