’பெரியகுளத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம்’ – மனுவில் ஓபிஎஸ் குறித்து இபிஎஸ் சொன்ன அடைமொழி

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி ஒ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி தாக்கல்செய்த மனுவில், ‘’பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் எனக்கூறி பாதுகாப்புக்கோரி கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், பன்னீர்செல்வம் தனது ஆட்களுடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளார். அதுதொடர்பாக புகார் அளித்தும், காவல்துறை பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுகவினர் 14 பேரை கைது செய்துள்ளது.
சொத்து உரிமை தொடர்பாக பிரச்னை இருந்தால் மட்டுமே சீல் வைப்பதற்கான சட்டப்பிரிவுகளை அமல்படுத்த முடியும். அதிமுக தலைமை அலுவலகத்தை பொறுத்தவரை, சொத்து உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை. கட்சியின் தலைமை நிலைய செயலாளர் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை தனக்கு உள்ளது. பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது கட்சி அலுவலகத்தை சீல் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
image
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்செய்த மனுவில், ‘’எடப்பாடி பழனிசாமி, தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டது உரிமையியல் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது. இதுநாள் வரை எந்த நீதிமன்றமும் தன்னை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றோ, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என்றோ அறிவிக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் நுழைய தனக்கு அனைத்து சட்டப்பூர்வ உரிமைகளும் உள்ளது. கட்சி தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டபோது அது என் கட்டுப்பாட்டில் இருந்தது.
அதிமுக தலைமை அலுவலகத்தின் உரிமை தொடர்பாகவும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது என்பது தொடர்பாகவும் எந்த ஆதாரங்களும் இல்லாமல், முறையாக விசாரணை நடத்தாமல் சீல் வைக்கப்பட்டுள்ளது. தென் சென்னை வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்துசெய்து அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
image
பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில் பழனிசாமியை கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் என எதிர் மனுதாரராக சேர்த்துள்ளார். ஒவ்வொரு இடத்திலும் இணை ஒருங்கிணைப்பாளர் என கூறியுள்ளார். ஆனால், பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், எவ்வித பதவியையும், பொறுப்பையும் குறிப்பிடாமல் பெரியகுளத்தைச் சேர்ந்த ஒ.பன்னீர்செல்வம் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் பன்னீர்செல்வம் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு நாளைய பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் இரு தரப்பும் நாளை காலை நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிட வாய்ப்புள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.