தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. பொறியியல் மாணவர்களில் 38 சதவிகிதம் பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதி 62 சதவிகித மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்திலோ, சில பாடங்களிலோ தோல்வியடைந்துள்ளனர்.
பொறியியல் மாணவர்களில் இத்தனை சதவிகிதம் பேர் தேர்வில் தோல்வியடைந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றிலும், அவை தொடர்புடைய அறிவியல் துறைகளிலும் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. அங்கு, பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளும் நடைபெறுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் சுமார் 450 அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
இணைப்புக் கல்லூரிகள் செயல்படுவதற்கு, ஆண்டுக்கு ஒருமுறை இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக உயர்மட்டக் குழு கடந்த மே – ஜூன் மாதங்களில் ஆய்வுமேற்கொண்டது. அந்த ஆய்வின் மூலமாக, 200-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள், தரம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லாததும், போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும்தான் அதற்கு காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
225 பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகித உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே இருப்பதாகவும், 62 பொறியியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம்வரை உட்கட்டமைப்பு பற்றாக்குறை இருப்பதாகவும், 23 பொறியியல் கல்லூரிகளில் முதல்வர்களின் தகுதி குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே கொரோனா பெருந்தொற்றும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2021 நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாகத் தள்ளிப்போனது. கடந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடைபெற்றன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பு, ஆன்லைன் வகுப்புகள் ஆகியவற்றின் காரணமாக மாணவர்களின் கற்றல் விகிதம் குறைந்திருப்பதாக பேராசிரியர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கொரோனா பரவலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைய ஆரம்பித்துவிட்டது. 2013-ம் ஆண்டு தேர்வு முடிவுகளைப் பார்த்தால், 80 சதவிகிதத்துக்கு மேல் தேர்ச்சிபெற்ற கல்லூரிகள் என்ற பட்டியலில் 31 சதவிகித கல்லூரிகள் மட்டுமே இடம்பெற்றன. அதே ஆண்டில், விழுப்புரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 140 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் ஒருவர்கூட தேர்ச்சிபெறவில்லை.
2019, நவம்பர் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் வெறும் 12 சதவிகித பொறியியல் கல்லூரிகள் மட்டுமே 50 சதவிகித தேர்ச்சியைப் பெற்றன. மொத்தம் 443 பொறியியல் கல்லூரிகளில் 25 சதவிகிதத்துக்கும் குறையாமல் தேர்ச்சிபெற்ற கல்லூரிகள் 220 மட்டுமே. கணிதப் பாட கேள்வித்தாள் கடினமாக இருந்ததும், விடைத்தாள் மதிப்பீடு கறாராக இருந்ததும்தான் தேர்ச்சி விகிதம் சரிந்ததற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. பல ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்த பாடத்தை மீண்டும் எழுதும்போது, அதற்கு கட்டணம் செலுத்துவார்கள். அதன் மூலம் பல்கலைக்கழகத்துக்கு மிகப்பெரிய வருவாய் கிடைக்கும் என்பதாலும், மறு கூட்டல் மூலமும் பெரும் தொகை வரும் என்பதாலும் விடைத்தாள் திருத்தம் கடினமாக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்கிற பேச்சு பெற்றோர் மத்தியில் இருக்கிறது.
இது குறித்து கல்வியாளர் ராமசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் இவ்வளவு குறைந்ததற்கு அதுதான் முக்கியக் காரணம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த நிலைமை தொடரும். பல்கலைக்கழகத்துக்கு வருமானம் கிடைக்கும் என்பதற்காக, நிறைய மாணவர்கள் தோல்வியடையும் வகையில், விடைத்தாள் திருத்தம் கடினமாக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்கிற கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை. அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை’ என்றார் ராமசுப்பிரமணியம்.
ஆனால், பொறியியல் படிப்பு மீது மோகம் அதிகரித்ததன் காரணமாக, தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கான தொழில் மாதிரி பொறியியல் படிப்பு மாறியது. ஆனால், போதுமான வகுப்பறைகளை ஏற்படுத்துவதிலும், ஆய்வக வசதிகளை உருவாக்குவதிலும் பல கல்லூரிகள் ஆர்வம் காட்டவில்லை.
தகுதிவாய்ந்த ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்கிற அக்கறையும் பல கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கு இல்லை. குறைந்த முதலீட்டில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே கல்லூரி உரிமையாளர்களின் சிந்தனையாக இருக்கும்போது, அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் வேறு எப்படி இருக்கும்?