உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் உலக மக்கள்தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் ரூ.4.8 கோடி செலவில் பணி முடிக்கப்பட்ட 18 துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனை கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்து பேசினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா.சபை ஜூலை 11-நதேதியை உலக மக்கள்தொகை தினமாக அறிவித்து ஒரு கருப்பொருளை மையப்படுத்தி கொண்டாடும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு “குடும்பக்கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், புதிய அத்தியாயம் படைப்போம்” என்ற கருப்பொருளை மையமாக வைத்து உலக மக்கள் தொகை தினத்தை கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் விட தமிழகம் குடும்ப நலத்துறையில் சிறந்து விளங்குகிறது. மற்ற மாநிலங்களில் ஆயிரத்தில் 19.7 சதவீதம் பேருக்கு குழந்தை பேறு நடக்கிறது. தமிழகத்தில் இது 14.2% என்ற அளவில் உள்ளது. குழந்தை மரணத்தை கணக்கிடும்போது மற்ற மாநிலங்களில் ஒரு லட்சத்தில் 103 குழந்தைகள் இறக்கின்றன. தமிழகத்தில் இது 58 குழந்தைகள் என கணக்கு உள்ளது. சிசு மரணத்தை பொறுத்தவரை ஆயிரத்தில் 35 சிசுக்கள் மரணமடைகின்றன. தமிழ்நாட்டில் இந்த விகிதம் ஆயிரத்திற்கு 13 என்ற அளவில் உள்ளது. இதன்மூலம், தமிழகம் சுகாதார அளவீடுகள் எல்லாவற்றிலும் சிறப்பான நிலையில் உள்ளதை அறியலாம்.
தமிழகத்தில் இரண்டு குழந்தைகளை பெற்ற 78.2% பேருக்கு குடும்பநல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகம் உள்ள நீலகிரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாவட்டங்களில் குடும்பநல சிகிச்சைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக 25.3 லட்சம் செலவில் டிஜிட்டல் முறையில் வாகன பிரசார திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலேயே முதல் முறையாக விருதுநகர் மாவட்டத்திற்குத்தான் 2 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் வழங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையும், ராஜபாளையம் அரசு மருத்துவமனையும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த 70.39 கோடி ரூபாயை ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட மருத்துவமனைகளின் வளர்ச்சிப் பணிகளுக்கென தனியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 30 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு,அதில் வளர் இளம் பருவத்தினருக்கான சிறப்பு பயிற்சி வழங்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 60% பேருக்கு சோதனைகள் பரிசோதனைகள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 79 லட்சம் பேர் மருத்துவப் பயன்களை பெற்று வருகின்றனர். விரைவில் ஒருகோடி பேருக்கு இத்திட்டத்தின் பலன்கள் சென்றடையவேண்டும் என்பதே அரசின் இலக்காகும். தமிழகத்தின் மக்களை தேடி மருத்துவ திட்ட செயல்பாட்டை பார்த்து வியந்த மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா, இந்தியா முழுவதும் இதை செயல்படுத்துவதற்கு ஆலோசனை கேட்டுள்ளார். அந்த வகையில் சிறப்பான திட்டங்களை சிந்தித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் விருதுநகர் மாவட்டத்திற்கு பிரத்தியேகமாக காச நோயை கண்டறிவதற்கு சிறப்பு வாகன பரிசோதனை மையம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவர் முகங்கள் நடத்துவதற்கு தனி சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், “சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் ரேசில் ஓடக்கூடியவர். இதனால் அவர் எங்கள் மத்தியில் மாரத்தான் வீரர் என அழைக்கப்படுவார். இந்த வயதிலும் தன் உடம்பை எப்படி பக்குவப்படுத்தி வைத்துள்ளாரோ, அதேபோலவே இந்த துறையையும் அவர் பக்குவப்படுத்தி தன் வசம் வைத்துள்ளார். தன் நலம் என்பதே ஒருவகை சுகாதாரம் தான். அந்த வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறையை சிறப்புடன் வழிநடத்தி வருகிறார்.
இன்று பெரும்பாலான மக்கள், அரசு மருத்துவமனைகளை தேடி சிகிச்சைக்காக வருகின்றனர். இதற்கு காரணம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்தித்து செயல்படுத்தும் சிறப்பான மருத்துவ திட்டங்கள் தான். இந்தியாவிலேயே கோவிட் தாக்கம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். இதற்காகவே சுகாதாரத்தில் அரசு அதிக அக்கறையும் கவனமும் கொண்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவரையும், மருத்துவ பணியாளர்களையும் தகப்பனாக இருந்து பாதுகாத்து வருகிறார்” என்றார்.
தொடர்ந்து, வளர் இளம் பெண்களுக்கு சமவயது பயிற்றுனர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.