உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,”மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாகச் செல்ல வேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதே நேரம் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது. கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் தொகை நிலைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நம்மிடம் திறமையான மனிதவளம் இருப்பது ஒரு சாதனைதான். ஆனால், நோய்கள், வளங்கள் பற்றாக்குறை இருக்கும் இடங்களில், மக்கள்தொகை அதிகரிப்பு தானாகவே நமக்குச் சவாலாக மாறிவிடும். நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். நமது மாநில திட்டங்களான ஆஷா சகோதரிகள், ஆகன்வாடி பணியாளர்கள், கிராமப் பிரதான்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் சுகாதாரத் துறையுடன் இணைந்து பணியாற்றுவது மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகும்” எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது,”மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பாஜக தலைவர்களிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். சீனா மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக இருந்தாலும், பொருளாதாரம், ஜிடிபி மற்றும் வளர்ச்சியில் இந்தியாவை விட சீனா முன்னணியில்தானே உள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகை அச்சுறுத்தலாக இருந்தால், சீனா எப்படி நன்றாகச் செயல்படுகிறது?
இதற்கு மேலாவது பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், கல்வியறிவின்மை போன்ற பிரச்னைகளை மத்திய அரசு தீவிரமாகக் கவனிக்க வேண்டும். இல்லையெனில், பணவீக்கம், கல்வியறிவின்மை மற்றும் வேலையின்மை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.
அக்னிபத் போன்ற திட்டத்தின் மூலம் வேலையில்லா திண்டாட்டம் குறித்த பயம், இளைஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அந்த கோபம் எப்படி அரசுக்கு எதிரான வன்முறையாக மாறியது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். இனிமேலாவது மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.