வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேசிய வெளிநாட்டு உதவித்தொகையின் மத்திய அரசு திட்டத்தின் கீழ், பழங்குடியினர், சீர்மரபினர், நாடோடி இனத்தவர், பகுதியளவு நாடோடி இனத்தவர், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் ஆகிய பிரிவினர் பயன்பெறலாம்.
படிப்புகள்:
இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு துறையிலும் உயர்நிலை படிப்புகளை மேற்கொள்ளலாம்.
உதவித்தொகை எண்ணிக்கை: எஸ்.டி., பிரிவினர் — 115/ சீர்மரபினர், நாடோடி இனத்தவர், பகுதியளவு நாடோடி இனத்தவர் — 6/ நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் — 4 என மொத்தம் 125 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்படுகிறது; இவற்றில், 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. போதுமான மாணவியர் விண்ணப்பிக்காத பட்சத்தில், பயன்படுத்தப்படாத இடங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும்.
தகுதிகள்:
பிஎச்.டி., படிப்புகளுக்கு முதுநிலை பட்டப் படிப்பும், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இளநிலை பட்டப் படிப்பும் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் அல்லது உரிய தகுதித் தேர்வில் சமமான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: ஏப்ரல் முதல் தேதியின்படி 35 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.வருமான வரம்பு: அனைத்து வகைகளிலும் ஒட்டுமொத்த குடும்ப வருமானம், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நிதி உதவி விபரம்:
எந்த நாட்டில் உள்ள கல்வி நிறுவனமாக இருந்தாலும் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம், விமானக் கட்டணம், விசா கட்டணம், மருத்துவ காப்பீடு ஆகியவை வழங்கப்படுகின்றன. இவைதவிர, நாடுகளுக்கு ஏற்ப இதர செலவினங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு: www.nosmsje.gov.in
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement