தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெறவேண்டும் என்று, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் நலமடைய வேண்டும்; அரசு நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என்று விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.