பெங்களூரு : ‘யு – டியூப்’ பார்த்து கார்களை திருடிய பி.காம்., பட்டதாரியை போலீசார் கைது செய்தனர். 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 கார்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.பெங்களூரின், எச்.எஸ்.ஆர்., லே — அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கார் திருட்டுகள் அதிகமாக நடந்தன. கார் திருடனை பிடிக்க, சிறப்புப் படை அமைக்கப்பட்டது.
இப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.ஜூன் 9 அதிகாலை 5:00 மணியளவில், போலீசார் ரோந்து சுற்றும் போது, டீச்சர்ஸ் காலனியில் பைக் திருட்டு நடந்ததாக தகவல் வந்தது. உடனடியாக செயல்பட்ட போலீசார், பைக்கை திருடி தப்பியோடியவரை, விரட்டி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, கார்களை திருடியது தெரிந்தது.கைதானவர், கோலார், முல்பாகலைச் சேர்ந்த அருண்குமார், 32; பி.காம்., பட்டதாரி. இவரது தந்தை ஆந்திராவின், பலமனேர்; தாய் கோலார் முல்பாகலை சேர்ந்தவர்கள். அருண் பிறந்து, வளர்ந்தது ஆந்திராவில். சமீபத்தில் இவர் முல்பாகலுக்கு வந்து, பாட்டி வீட்டில் வசிக்கிறார்.இவர் கொலை, கொள்ளை, கொள்ளை முயற்சி, தாக்குதல் குற்றங்களில் ஈடுபட்டவர்.
கொள்ளை வழக்கில் கைதாகி, ஆந்திராவின் மதனபள்ளி சிறையில் இருந்தார். இங்கு கார் திருடன் ராகேஷ் என்பவர் அறிமுகமானார். இவரிடம் கார் திருட்டை பற்றி, அருண்குமார் கேட்டு தெரிந்து கொண்டார்.சிறையிலிருந்து வெளியே வந்த பின், யு டியூப் பார்த்தும், கார்கள் திருடுவது எப்படி என்பதை கற்றுக்கொண்டார். அதன்பின் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட கார்களை திருடினார்.இந்த கார்களை தமிழகத்தின் திருச்சி, திருவண்ணாமலை, வேலுார், ராமநாதபுரம், மேட்டுப்பாளையம், திருப்பத்துார், சென்னை, நாகப்பட்டினம், நாமக்கல் போன்ற நகரங்களுக்கு கொண்டு சென்று, குறைந்த விலைக்கு விற்றார்.காரின் பதிவு ஆவணங்களை, பின்னர் தருவதாக கூறி நம்ப வைத்தார். லட்சக்கணக்கான பணத்தை, நண்பர்களுடன் சேர்ந்து, வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று ஆடம்பரமாக செலவழித்தது தெரிந்தது.இவரிடமிருந்து, 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 கார்கள், ஒரு பைக், கார் திருட்டுக்கு பயன்படுத்திய உபகரணங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement