மெக்சானா: ரஷ்யாவில் கிரிக்கெட் பந்தயத்திற்கு பணம் வைத்து சூதாடுபவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் குஜராத்தில் போலியாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தை சேர்ந்த ஒரு கும்பல் ரஷ்யாவில் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாடும் கும்பலிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக போலி டி20 கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளது. குஜராத்தில் வயல் ஒன்றை வாடகைக்கு எடுத்து கிரிக்கெட் மைதானம் போல் தயார் செய்துள்ளனர். பண்ணையில் வேலை செய்பவர்கள் மற்றும் இளைஞர்கள் 20 பேரை சேர்த்துள்ளனர். பிரபல கிரிக்கெட் குழுக்களின் பெயர்கள் பொறித்த சீருடையை அணிவதற்கு கொடுத்து அவர்களை விளையாட செய்துள்ளனர். இந்தியன் ப்ரீமியர் லீக் என்ற பெயரில் இந்த போட்டியை ரஷ்யாவின் யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பியுள்ளனர். இதனை பார்த்து ரஷ்யாவை சேர்ந்த சிலர் பந்தயம் கட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறித்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் போட்டியை நடத்திய ஷோயிப் தேவ்டா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவருடன் சேர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டுள்னர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.