புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
இதே வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.
இதைத் தொடர்ந்து ஜூன் 22-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. கரோனாவில் இருந்து முழுமையாக குணமாகும்வரை காலஅவகாசம் வழங்குமாறு சோனியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டது.
இந்த சூழலில் சோனியா காந்திக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் வரும் 21-ம் தேதி அமலாக்கத் துறையின் டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.