விராட்கோலியை நீக்க வேண்டும் என்ற கபில்தேவ் கருத்துக்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலடி..!

நாட்டிங்காம்,

2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முன்னாள் கேப்டன் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். பார்மின்றி தவிக்கும் விராட்கோலியை 20 ஓவர் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில் ‘நடப்பு பார்மை பொறுத்து களம் இறங்கும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒருவர் தொடர்ந்து சொதப்பினாலும் புகழ் பெற்ற வீரர் என்பதற்காக வாய்ப்பு அளிப்பது சரியாக இருக்காது. முன்னணி வீரருக்கு வாய்ப்பு அளிப்பதற்காக திறமையான இளம் வீரர்களை வெளியில் வைக்கக்கூடாது. தற்போது விராட்கோலி முன்பு மாதிரி சிறப்பாக செயல்படுவதில்லை. உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கும் போது முன்னாள் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனான விராட்கோலியையும் நீக்கலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதேபோல் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும், விராட்கோலி சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் விராட்கோலி குறித்து கபில்தேவ் தெரிவித்த கருத்துக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலளித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மாவிடம், விராட்கோலி மீதான விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ரோகித் சர்மா கூறியதாவது:-

விமர்சனங்களால் எங்களுக்கு பிரச்சினை எதுவுமில்லை. ஏனெனில் வெளியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் கவனிப்பது கிடையாது. மேலும் இந்த நிபுணர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. ஏன் அவர்கள் நிபுணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பதும் எனக்கு தெரியாது. விமர்சகர்கள் வெளியில் இருந்து அணியை பார்க்கிறார்கள். எனவே அணிக்குள் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது.

எங்களுக்கென்று ஒரு செயல்முறை உள்ளது. நாங்கள் அணியை உருவாக்குகிறோம். அது குறித்து விவாதிப்பதுடன் நிறைய சிந்திக்கிறோம். நாங்கள் தேர்வு செய்யும் வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதுடன், அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கிறோம். வெளியில் இருப்பவர்களுக்கு இதனை பற்றி தெரியாது. அணிக்குள் என்ன நடக்கிறது என்பது தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

வீரரின் (கோலி) பார்ம் குறித்து பேசுகிறீர்கள். எல்லோருக்கும் பார்மில் ஏற்றம், இறக்கம் ஏற்படும். ஆனால் வீரரின் தரம் மோசமாகாது. நாங்கள் வீரர்களின் தரத்துக்கு ஆதரவாக இருக்கிறோம். ஒரு வீரர் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் போது ஒன்றிரண்டு தொடர் மோசமாக அமையும். இது எல்லோருக்கும் நடக்கக்கூடிய ஒன்றாகும். அதற்காக அவருடைய பங்களிப்பை மறந்து விடக்கூடாது. இதனை புரிந்து கொள்ள சிலருக்கு காலம் பிடிக்கும். எங்களுக்கு வீரர்களின் முக்கியத்துவம் தெரியும். வெளியே இருப்பவர்கள் விமர்சிப்பதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.