முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மலரி மாளிகை என்பன முற்றிலும் போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.
இதனையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியல் ஜனாதிபதி அரச மாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியான நிலையில், எதிர்வரும் 13ம் திகதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இடைக்கால சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஜனாதிபதி தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபக்ச குடும்பத்தினர் எங்குள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வம்
சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து விரைவில் கப்பலில் பாதுகாப்பாக ஏறிய ஜனாதிபதி, இன்று நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கை கடற்பரப்பில் தங்கியிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனிடையே, ராஜபக்ச குடும்பத்தினர் எங்குள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதுபற்றி சபாநாயகருக்கு சரியாகத் தெரிந்தாலும், பல சந்தர்ப்பங்களில் குழப்பமான பேச்சால் தற்போது மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய எதிர்வரும் 13ஆம் திகதி பதவியை விட்டு வெளியேறுவாரா இல்லையா என்பது தொடர்பில் பலருக்கு இன்னும் சந்தேகம் நிலவி வரும் நிலையில், சபாநாயகரின் முரண்பாடான பேச்சுக்களால் இறுதித் தீர்மானம் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையிலேயே முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த போதிலும், கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.