Senior ADMK leader controversy speech audio leaked: இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அணிகள் இடையிலான மோதலை விட, அ.தி.மு.க-வில் லேட்டஸ்ட் ஹாட் டாக், அதிமுக சீனியர் தலைவர் ஒருவரின் ஆடியோ தான். மேற்படி தலைவர், எம்.ஜி.ஆர் காலம் தொட்டு அ.தி.மு.க-வில் இருந்து வருபவர். ஓ.பன்னீர்செல்வத்தின் முதல் தர்மயுத்தம் தருணத்தில் அவரது பக்கம் நின்றவர். தற்போது இ.பி.எஸ் சார்பில் ஓ.பி.எஸ் இடம் தூது போன தலைவர்களில் இவரும் ஒருவர். தூதுக்கு ஓ.பி.எஸ் படியாத பட்சத்தில் இவர் ஒற்றை தலைமை தேவை என்கிற கோஷத்துடன் இ.பி.எஸ் அணியில் தங்கி விட்டார். சென்னையில் வசித்து வருபவர் இந்த சீனியர் என்பது கூடுதல் தகவல்.
லேட்டஸ்டாக கன்னியாகுமரி மாவட்ட அதிமுக பிரமுகர் ஒருவர் இவருடன் போனில் உரையாடிய ஆடியோ லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சி நிலவரங்களை ஒவ்வொரு கேள்வியாக எழுப்பி மேற்படி கன்னியாகுமரி மாவட்ட பிரமுகர் பேசப் பேச, இந்த சீனியர் தலைவர் பல்வேறு அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்துகிறார்.
இதையும் படியுங்கள்: ஐ.டி ரெய்டில் சிக்கிய அரசு காண்ட்ராக்டர்கள்: ரூ500 கோடி சொத்து கண்டுபிடிப்பு
ஷாக் அடிக்கும் துறையை கையாண்ட மணியான முன்னாள் அமைச்சர் ஒருவர் ஸ்டாலின் இடம் சரண்டர் ஆகி விட்டார் என்றும், சாமியான முன்னாள் அமைச்சர் கட்சிக் கூட்டங்களில் ஸ்டாலினை குறை சொல்லி பேசுவதில்லை என்றும் ஆடியோவில் சாடுகிறார் சீனியர்.
கடந்த 23-ம் தேதி பொதுக் குழுவில் சி.வி சண்முகம் அவசரப்பட்டு தீர்மானங்கள் தோற்கடிக்கப்படுவதாக மேடையில் அறிவித்ததை சாடுகிறார் இந்த தலைவர்.
வட மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவரை குறிப்பிட்டு ‘அவரது தந்தை எனது கிளாஸ்மேட். இவருக்கு எனது மகன் வயதை விட நாலு வயது கம்மி. பகலிலேயே குடித்துவிட்டு வருகிறார். குறிப்பிட்ட சமூக எம்.எல்.ஏக்கள் 19 பேர் அவரது பொறுப்பிலும், இன்னொரு வடமேற்கு மாவட்ட சீனியர் ‘சாமி’ பொறுப்பிலும் இருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் கைப்பாவையாக எடப்பாடி போகிறார்’ என அந்த உரையாடலில் சாடுகிறார் மேற்படி சீனியர்.
மேலும், ‘அந்த வடமேற்கு மாவட்ட முன்னாள் அமைச்சர் ‘ஒற்றை தலைமை’ ஆவதாக கூட பேச்சு இருந்தது. பின்னர் நல்லவேளை அது நடக்கவில்லை. அவர் ஒரு நக்சலைட். அதனால்தான் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அவரை ஒதுக்கி வைத்திருந்தார்கள். தற்போது தி.மு.க சீனியர் அமைச்சர் ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு பல கோடி ரூபாய் அளவில் குவாரி பிசினஸை அவர் செய்வதாக’ இந்த சீனியர் தனது உரையாடலில் குறிப்பிடுகிறார்.
மணியான 2 முன்னாள் அமைச்சர்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் கைகளில் 42 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கும் பவர் இருக்கிறது. எடப்பாடியை சுற்றி திருட்டு பசங்க இருக்கிறாங்க. வேற வழியில்லாமல் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு அவர் இருக்க வேண்டி இருக்கிறது’ என்பதாக காரசாரமாக அந்த ஆடியோ நீள்கிறது. சமூக வலைதளங்களில் இந்த ஆடியோ கசிந்து அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.