அதிமுக சிறப்பு பொது குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வதை நீக்கியது செல்லாது என்று, ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைத்தியலிங்கம் தெரிவித்ததாவது, “புரட்சித் தலைவர் இந்த இயக்கத்தை துவங்கிய போது இயற்றிய சட்டத்தின் படி, அடிமட்ட உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இப்பொழுது அடிப்படைத் தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒரு ஓட்டின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பதவிக்காலம் ஐந்தாண்டு காலம். இதனை பொதுக்குழு நீக்க முடியாது. நேற்று பொதுக்குழுவில் கொண்டு வந்த தீர்மானமும் செல்லாது.
இது வரை தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளராக அண்ணன் ஓ பன்னீர்செல்வம் தான் பொருளாளர், ஆகையால் கடிதம் எழுதி இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், “தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைப்பவர் ஓ பன்னீர்செல்வம், அவர் ஒரு சுயநலவாதி” என்று நேற்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இது குறித்து உங்களின் கருத்து? என்று கேட்ட,
அதற்க்கு பதிலளித்த வைத்தியலிங்கம், “இதில் எந்த அராஜகமும் இல்லை. அம்மா தான் நிரந்தர பொதுச் செயலாளர். இனிமேல் பொதுச் செயலாளர் என்ற பதவியே இல்லை என்று, பொதுக்குழுவில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அம்மாவுக்கே தற்போது துரோகம் செய்துள்ளனர். இவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை பற்றி குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எடப்பாடி கே பழனிசாமி, முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்தார். நான்கு வருடம் ஆட்சி செய்வதற்கு இவருக்கு உறுதுணையாக இருந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் துரோகம் செய்கிறார் எடப்பாடி கே பழனிசாமி.
நேற்று கட்சியின் அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செல்கிறார். நாங்கள் செல்வதற்கு முன்பே சோடா பாட்டில், கல், அருவா, கம்பிகளை வீசுகின்றனர். ரவுடிகளை வைத்துக்கொண்டு அட்டூழியம் செய்தது எடப்பாடி பழனிசாமியின் தரப்பு தான். எங்களை குறை சொல்வதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை” என்று வைத்தியலிங்கம் தெரிவித்தார்.