Shiv Sena: பாஜக – சிவசேனா மீண்டும் கூட்டணி? – திரெளபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதை அடுத்து, பெரும்பான்மை இல்லாதததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பின்னர், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார். தொடர்ந்து, மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக அவர் பதவி ஏற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக, பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, உண்மையான சிவசேனா யார் என்பது தொடர்பாக, உத்தவ் தாக்கரே – ஏக்நாத் ஷிண்டே இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில், மும்பையில் உள்ள அவரது வீட்டில், அக்கட்சி எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மக்களவையில் 19 உறுப்பினர்கள், மாநிலங்களவையில், 3 உறுப்பினர்கள் என மொத்தம் 22 உறுப்பினர்கள் சிவசேனாவுக்கு உள்ள நிலையில், இதில் 6 பேர், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் உள்ளனர். இதன்படி, 16 பேர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரெளபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என, உத்தவ் தாக்கரேவிடம், அக்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். மேலும், திரெளபதி முர்மு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், அவரை ஆதரித்தால், மகாராஷ்டிர மாநில மக்கள் தொகையில் 10 சதவீதம் உள்ள பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களின் நன்மதிப்பை பெற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

எம்பிக்கள் ஒருமனதாக திரெளபதி முர்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதை அடுத்து, அவர்கள் விருப்பப்படியே, பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்க, உத்தவ் தாக்கரே முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டு உள்ள நிலையில், பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு, உத்தவ் தாக்கரே ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பது, அக்கட்சிகளிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டு, மீண்டும் பாஜக கூட்டணியில் சேர, உத்தவ் தாக்கரே தயாராக இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.