அண்ணன்- தங்கை கட்சிகள் இணைப்பு: அமர்க்களமான பிரியாணி விருந்து

அதிமுக அணிகளை ஒன்றிணைத்து, மாநிலத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவதற்கான பணிகளைத் தொடங்குவதே எனது ஒரே அஜெண்டா என தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் சசிகலாவின் சகோதரர் வி.கே.திவாகரன் நிறுவிய அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா அணியுடன் இணைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலா கலந்துகொண்டார்.  நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு `நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி’ என்ற பாடலில் வரும் `தவறு என்பது தவறி செய்வது’ என்ற வரியை மட்டும் திரும்ப திரும்ப ஒலிக்க செய்தனர்.

தொடர்ந்து `ஏமாற்றாதே ஏமாறாதே!’ என்ற பாடலும் ஒலித்தது. அதன்பிறகு சசிகலா மேடைக்கு வரும்போது மைக் பிடித்த நிர்வாகி ஒருவர், `தியாகத் தலைவி சின்னம்மா..!’ என கோஷம் போட்டார். தொடர்ந்து சசிகலாவிற்கு வெள்ளி செங்கோல், வீரவாள், பூங்கொத்து கொடுத்து பலரும் வரவேற்றனர். அதன் பின்னர் அண்ணா திராவிடர் கழகம் இணைப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய சசிகலா கூறுகையில்,

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அ.தி.மு.க.வுக்கு எதிர்காலம் இருக்காது என்றும், தி.மு.க.வும், அதன் தலைவர் மறைந்த மு.கருணாநிதியும், இனி மாநிலத்தில் தங்களுக்கு போட்டியாக இருக்கக் கூடாது என்று கனவு கண்டுகொண்டிருந்ததனர். அப்போது,, கருணாநிதியின் கனவு தகர்ந்து போனதால், இரு அணிகளும். சிறிது நாள் கழித்து ஒன்றுபட்டது.

அந்த முழு நிகழ்வுக்கும் நான் சாட்சியாக இருந்தேன். அதன் மூலம் பல்வேறு கோஷ்டிகளை இணைத்து மீண்டும் ஒரே கட்சியாக கொண்டு வருவதற்கான திறமையையும் அறிவையும் வளர்த்துக் கொண்டேன். தற்போது நேரம் வந்துவிட்டது, கட்சியில் ஒற்றுமைக்காக பாடுபடத் தொடங்குவேன், அதுவே என் வாழ்வின் லட்சியம்

அ.தி.மு.க.வின் தற்போதைய செயல்பாடுகள் கேலிக்கூத்தாக இருக்கிறது. “உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் விரைவில் நல்ல செய்தி வரும்”“ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இக்கட்டான சூழ்நிலையும், குழப்பங்களும் ஏற்பட்டன. நானோ, விதிவசத்தால் பெங்களூரில் சிறைப்பட்டிருந்தேன். அதன் பிறகு பல்வேறு சூழ்ச்சிகள், துரோகங்கள் அரங்கேறின. இதன் காரணமாக, கட்டுக்கோப்பாக இருந்த நம் இயக்கம் எதிரிகளின் ஆசைப்படி சிதறிப்போனது.

அம்மாவின் தொண்டர்கள் யாரும் தி.மு.க-விற்கு ஓடிவிடவில்லை. ஆதாயம் தேடி ஒரு சிலர் சென்றிருக்கலாம். அவர்களை கணக்கில் கொள்ள வேண்டாம். அவர்களால், யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களில் நம்மைவிட்டு பிரிந்து சென்றவர்களை, கட்சியின் நலன் கருதி நாம் மீண்டும் ஒன்று சேர்த்திருக்கிறோம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நம் கட்சி சந்திக்காத பிளவா? எத்தனையோ பேர் அன்றைக்கு அ.தி.மு.க-விற்கு இனி எதிர்காலம் இல்லை, அ.தி.மு.க-வின் கதை முடிந்துவிட்டது. என்றெல்லாம் சொன்னார்கள். கருணாநிதியும் இதே கனவோடுதான் அன்றைக்கு இருந்தார். ஆனால் என்ன நடந்தது? கருணாநிதி கண்ட கனவை மொத்தமாக கலைத்தோம். இது நம்மால் எப்படி சாத்தியப்பட்டது.

ஒரு பிரிந்த கட்சியை எப்படி சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாக கற்றுக்கொண்டு விட்டேன். இரு அணிகளாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்தப் பிறகு, அனைவரையும் நம் கட்சிக்காரர் என்று மட்டும்தான் பார்த்தோமே தவிர, இவர் இந்த அணியைச் சேர்ந்தவர், அவர் அந்த அணியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் வேற்றுமைப்படுத்தி ஒரு நாளும் பிரித்து பார்த்ததில்லை. இதை நாங்கள் கற்றுக்கொண்டது புரட்சித்தலைவரிடம்தான்.

வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே மிகப் பெரிய பொறுப்பு எனக்கு வந்துவிட்டது. கழகத்திலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைத்தே பழக்கப்பட்டு விட்டேன். எனவே அனைவரையும் ஒன்றுபடுத்தி இயக்கத்தை கண்டிப்பாக வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதே என் எஞ்சியுள்ள வாழ்க்கையின் லட்சியமாக கருதுகிறேன்.

எத்தனை பிரிவுகளாக பிரிந்து நின்றாலும் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, மக்கள் விரோத தி.மு.க-வை எதிர்ப்பதுதான். நம் அனைவருடைய எண்ணமும், அ.தி.மு.க-வை வலிமைப்படுத்தி, அதை மீண்டும் அதே பழைய நிலைக்கு கொண்டுவந்து கழக ஆட்சியை மீண்டும் அரியணையில் ஏற்றுவதுதான்.

இதை மனதில் வைத்துதான், அனைவரையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டில் அ.தி.மு.க-தான் ஒரே வலிமையான கட்சி என்ற நிலையை அடைகின்ற உன்னதமான பணியை மேற்கொண்டு வருகிறேன். அதே போன்று பெங்களூரிலிருந்து வந்தநாள் முதல், இன்று வரை அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தையே தொடர்ந்து சொல்லி வருகிறேன். நான் நேற்று ஒரு பேச்சு… இன்று ஒரு பேச்சு பேசுபவள் அல்ல. நான் என்றைக்கும் சொன்ன சொல் மாறாமல் நடந்து கொண்டிருக்கிறேன்.

இந்த எதார்த்தத்தை புரிந்துகொண்டு அனைவரும் என்னுடன் தோலோடு தோல் கொடுத்து நம் இயக்கத்திற்கு வலு சேர்க்க வேண்டும். அதன் தொடக்கமாகத்தான், திவாகரன் தலைமையில், அண்ணா திராவிடர் கழகம் என தனி அமைப்பாக இதுநாள் வரை செயல்பட்டு வந்ததை, என் தலைமையிலான அ.தி.மு.க-வை வலிமைப்படுத்தும் வகையில் தங்களை இணைத்து கொண்டுள்ளார்கள்.

இதே போன்று இன்னும் பிரிந்து செயல்பட்டு கொண்டிருக்கும், அனைவரையும் ஒன்று சேர்த்து ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வை உருவாக்கும்வரை நான் ஓயமாட்டேன். நாமெல்லாம் நன்றிக்காகவும், விஸ்வாசத்திற்காகவும் துணை நின்றவர்கள். துரோகங்களை வேரறுத்து, தியாகங்களை மட்டும் இதுநாள் வரை செய்து வந்திருக்கிறோம்.

அம்மாவை நம் கண்களின் இமை போல கடைசி வரை பாதுகாத்து வந்தவர்கள் நாம். எனவே அ.தி.மு.க-வை காப்பாற்றுவதிலும் இன்றைக்கு நமது பங்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. ஜெயலலிதா எனக்கு பிறகு நூறு ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்றார். அன்றைக்கு அவர் சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல. இதை நிறைவேற்றுவதுதான், நம் ஒவ்வொருவரின் கடமை. நம் இயக்கத்தில் நடந்த நிகழ்வுகள் மனதுக்கு வேதனையை ஏற்படுத்துகின்றன. ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா? ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நான் பெரியவன், நீ பெரியவன் என்று போட்டி போட்டுக்கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்?

இதனால் அதிகம் பாதிப்படைவது அப்பாவி தொண்டர்கள் என்று நினைக்கும் போதுதான், என் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நடந்த பொதுக்குழுக்கள்தான் உண்மையான பொதுக்குழு. அதன்பிறகு நடைபெற்றதாகச் சொல்லப்படும் பொதுக்குழுக்கள் சட்டப்படி செல்லாது. அதனை நிர்வாகிகள் கூட்டமாகத்தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள்.

அ.தி.மு.க வரலாற்றிலேயே இதுபோன்று ஆண்டுக்கு ஒரு முறை கழக சட்ட விதிகளை யாரும் இப்படி மாற்றியது இல்லை. இது மிகப்பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு அப்படியே விட்டுவிட முடியாது. எத்தனையோ சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் வென்றெடுத்த இயக்கம், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்ச்சி வலையிலிருந்தும் கண்டிப்பாக விடுபடும். நான் மேற்கொண்டுவரும் புரட்சிப் பயணமே அதற்கு சாட்சியாக இருக்கிறது.

நான் இருக்கின்றவரை யாராலும் இந்த இயக்கத்தை அபகரித்துவிடவோ, அழித்துவிடவோ முடியாது… விரைவில் எல்லாவற்றையும் சரி செய்து, அனைவரையும் ஒருங்கிணைத்து மீண்டும் நம் இயக்கம் புது பொலிவு பெறும் என்று உறுதியளிக்கிறேன். தி.மு.க-வினர் எத்தனை கணக்குகள் போட்டாலும் அது நிறைவேறப் போவதில்லை. மக்கள் தி.மு.க.வி-னரை தள்ளிவைக்க தயாராகி விட்டார்கள். அடுத்து அமையப்போவது நமது ஆட்சிதான்” என பேசியுள்ளர்.

கூட்டத்திற்கு சென்னை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர்களால் மட்டன் பிரியாணி சமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு  விருந்து உபசரிப்பால் விழாக்கூடம் அமர்க்களப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

க. சண்முகவடிவேல் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.