சென்னை: அதிமுக விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சட்ட நிபுணர்கள், கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியே தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், உயர் நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து, பழனிசாமி தரப்பினர் கடந்த 11-ம் தேதி வானகரத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர். இதில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.
பொதுக்குழு தீர்மானங்கள் அன்று இரவே தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டன. இதன் மீது எந்த முடிவும் எடுக்க கூடாதுஎன ஓபிஎஸ்ஸும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். இந்த இரு தரப்பு முறையீடுகளும் தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டுள்ள நிலையில், பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள இபிஎஸ்ஸின் இல்லத்துக்கு நேற்று காலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்தும் நிர்வாகிகள் பூங்கொத்துடன் வந்துவாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதுதவிர, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தம்பிதுரை, கே.பி.அன்பழகன், பா.வளர்மதி, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்து இபிஎஸ்ஸுடன் பலமணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதில் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் பங்கேற்றனர்.
அதேபோல, பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில், அவரது ஆதரவு நிர்வாகிகளான ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மற்றும் சில மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினர்.
அடுத்த கட்டமாக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பை ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறித்து, அவரது தரப்பைதனிமைப்படுத்தவும் இபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக பேரவை செயலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, ஓபிஎஸ் தரப்பும் தங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்று கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் முறையிடுவது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சட்ட நிபுணர்களுடன் தனித்தனியே தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பெறுவதில் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன்முனைப்பு காட்டி வருகின்றனர். துணை பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதிலும் இவர்கள் மற்றும் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் காய்நகர்த்துவதாக கூறப்படுகிறது.
கட்சிப் பெயர், சின்னம்
அதிமுக கட்சிப் பெயரும், ‘இரட்டை இலை’ சின்னமும், தற்போது வரை ஓபிஎஸ், செம்மலைபெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இருவரும் எதிரெதிர் அணியில் உள்ளனர். எனவே, மீண்டும் சின்னமும், கட்சி பெயரும் முடக்கப்படும் பட்சத்தில், கட்சி நிர்வாகிகளின் பலமே இறுதி முடிவுக்கு வித்திடும்.
அதிமுகவில் ஜெயலலிதா – திருநாவுக்கரசர் இடையே அதிகாரப் போட்டி எழுந்தபோது, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெரும்பான்மையாக பெற்ற ஜெயலலிதாவுக்கே இரட்டை இலை சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை தேர்தல் ஆணையம் வழங்கியது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் பெரும்பான்மைஎம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகளின் ஆதரவு அடிப்படையில் அகிலேஷ் யாதவிடம் கட்சியை தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது.
இந்த அடிப்படையில், அதிமுக தொடர்பான தீர்ப்பும் அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும், கட்சியின்முந்தைய பொதுக்குழு தீர்மானங்கள், அதில் திருத்தப்பட்ட விதிகள், கட்சியின் நிறுவன தலைவர் கொண்டுவந்த சட்டதிட்ட விதிகள்உள்ளிட்டவையும் கருத்தில் கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்தும் சட்ட நிபுணர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசித்து வருகின்றனர்.
அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில், அதிமுக தலைமை அலுவலகம், ஓபிஎஸ், இபிஎஸ் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.