கொழும்பு : இலங்கையில் இருந்து அமெரிக்கா தப்ப முயன்ற அந்நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்சே, 71, கொழும்பு விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற அதிபர் கோத்தபயவின் முயற்சியும் முறியடிக்கப்பட்டதால், அவர் கடல் வழியே தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இடைக்கால அதிபர்
நம் அண்டை நாடான இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ மாளிகை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரின் இல்லத்தில் புகுந்த அந்நாட்டு மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபரும், பிரதமரும் அறிவிக்கப்படாத இடத்தில் தலைமறைவாக உள்ளனர்.
அதிபர் பதவியை கோத்தபய இன்று ராஜினாமா செய்கிறார். இதற்கான கடிதத்தில் அவர் நேற்று முன் தினம் கையெழுத்திட்டதாகவும், மூத்த அரசு உயர் அதிகாரி வாயிலாக அது சபாநாயகர் வசம் இன்று சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் ராஜினாமாவை தொடர்ந்து வரும் 20ல் புதிய இடைக்கால அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பார்லி.,யில் நடக்க உள்ளது. அதிபர் தேர்வானதும், அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைக்கப்படும். அதன் பின், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தன் பதவியை ராஜினாமா செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பாலவேகயா கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை இடைக்கால அதிபர் ஆக்கும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சரும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்சே, கடந்த ஏப்ரலில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்க ‘பாஸ்போர்ட்’ வைத்துள்ள இவர், இலங்கையில் இருந்து அமெரிக்கா தப்பி செல்வதற்காக, கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தார். ‘சில்க் ரூட்’ எனப்படும், வி.வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்தும் வாயில் வழியாக விமான நிலையத்திற்குள் செல்ல முயன்றவரை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற பயணியரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவர் பயணம் செய்ய குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். எனவே, விமான நிலையத்தில் இருந்து பசில் திருப்பி அனுப்பப்பட்டார்.
துபாய் தப்ப திட்டம்
இதற்கிடையே, நேற்று முன் தினம் மாலை, அதிபர் கோத்தபயவின் உதவியாளர் ஒருவர் கொழும்பு விமான நிலையத்துக்கு வந்தார். அதிபர், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட 15 பேர், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு செல்ல, ‘ஸ்ரீலங்கன் ஏர்வேஸ்’ விமானத்தில் டிக்கெட் முன் பதிவு செய்திருப்பதாக கூறிய அவர், பாஸ்போர்ட்டுகளை குடியேற்றத் துறை அதிகாரியிடம் கொடுத்தார்.
ஆனால் அதிகாரிகள், அவரையும் திருப்பி அனுப்பி விட்டனர். இதனால், அதிபர் கோத்தபயவும், அவரது குடும்பத்தினரும் துபாய் செல்லும் திட்டம் முறியடிக்கப்பட்டது. இதையடுத்து, கடல் வழியாக ஏதாவது ஒரு நாட்டுக்கு தப்பிச் செல்ல, கோத்தபய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நாட்டின் நெருக்கடி நிலையை கருத்தில் வைத்து விமான நிலையத்தில் வி.வி.ஐ.பி.,க்களுக்கான வாயில், மறு அறிவிப்பு வரும் வரை நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்:முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே, மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர்கள் அஜித் நிவர்த் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மண், முன்னாள் நிதித்துறை செயலர் எஸ்.ஆர்.அட்டிகேல் உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேற இடைக்கால தடை விதிக்க வேண்டும். நிதி முறைகேடுகள் மற்றும் தவறான நிர்வாகத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டு உள்ளது.
இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே, விமானப்படை தலைமை தளபதி சுதர்சனா பதிரானாவுக்கு சொந்தமான தனி பங்களாவில் தலைமறைவாக உள்ளதாக செய்தி பரவியது. இதை, அந்நாட்டு விமானப்படை திட்டவட்டமாக மறுத்துள்ளது. விமானப்படையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதாக விமானப்படையின் செய்தி தொடர்பாளர் துஷான் விஜேசிங்கே தெரிவித்தார்.
10 பேர் காயம்!
அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ‘டெம்பிள் ட்ரீஸ்’ மற்றும் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பிரதமர் இல்லத்தில் உள்ள போராட்டக்காரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக நேற்று கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரதமர் அலுவலகத்தில் இருந்து விலை உயர்ந்த, ‘வீடியோ கேமரா’ உள்ளிட்ட சில உபகரணங்கள் களவு போய்விட்டதாக, பிரதமரின் ஊடகப்பிரிவினர் போலீசில் புகார் அளித்தனர்.
ரொட்டி விலை உயர்வு!
இலங்கையில் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் ரொட்டி விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜெயவர்தனே கூறியதாவது:ஒரு கிலோ கோதுமை மாவு 300 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. இதனால் ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை உயர்த்துவதை தவிர்க்க முடியவில்லை. எனவே, ரொட்டி விலையை 20 ரூபாயும், மற்ற பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாயும் உயர்த்திஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்