பெரம்பலூர்: “அரசுப் பேருந்துகளை தனியார்மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய அரசுப் போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவருடைய வழியில் செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் தனியார்மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, புதிதாக 2 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் தாமதமாகியது தற்போது நீதிமன்றத்தில் அதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இதற்கான டெண்டர் கோரப்பட்டு, அதில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கை தொடங்கப்படும். இந்த நடைமுறைகளை 8,9 மாதங்களுக்குள் முடிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த உத்தரவின் அடிப்படையில் பணிகள் தொடங்கியுள்ளன.
அரசுப் பேருந்துகளை தனியார்மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய அரசுப் போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தனியார் வசமிருந்த பேருந்துகளை அரசுடைமையாக்கி, நகர்ப்புறத்தில் மட்டும் இயங்கி வந்த பேருந்துகள், கிராமப்புறங்களுக்கும் செல்கின்ற நடவடிக்கைகளை எடுத்தவர், மறைந்த முதல்வர் கருணாநிதி.
எனவே, அவருடைய வழியில் செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில், தனியார்மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று அவர் கூறினார்.