திருகோணமலை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வசிக்கும் ஆதிவாசிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் நுண்நுதி செயற்பாடு மூலம் மாவட்ட பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்று (12) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலகத்தின் நல்லூர், சந்தோசபுரம் உள்ளிட்ட கரையோரம் சார்ந்த சில கிராமங்களிலும் வெருகல் பிரதேசத்தின் சில கரையோரம்சார் கிராமங்களிலும் ஆதிவாசிகள் வசித்து வருகின்றனர்.
யுத்தத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்த போது தமது பூர்வீக இடங்கள் இன்னொரு தரப்பினர் மூலம் கைப்பறப்பட்டுள்ளன.இவற்றை எமக்கு விவசாயம் செய்ய வழங்க வேண்டும். தமது தனித்துவத்தைப்பேணி செயற்பட ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்துடன் தம் வாழ்வாதார செயற்பாடான தேன் சேகரித்தல் தொழிலை மேற்கொள்ளும்போது வனஜீவராசி திணைக்களத்தால் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் மூதூர் சம்புக்கல்லிக்குளம் சார்ந்த பகுதி வெளித்தரப்பினர்களால் தமது தனியார் காணி என குறிப்பிட்டு மண் நிரப்பப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தது. எமது எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அக்குளத்திலே எமது மக்கள் மீன்பிடித்து வாழ்க்கையை நடாத்துகின்றனர். அந்த இடம் தனியாருக்குறியதாயினும் அவர்களுக்கு மாற்றுக்காணியை வழங்கி இக்குளத்தில் தம் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள உதவேண்டும் என இதன்போது கலந்து கொண்ட ஆதிவாசியொருவர் தெரிவித்தார்.
அரசாங்க அதிபர் குறித்த விடயங்களை கவனத்திற்கொண்டதுடன் உரிய விடயங்கள் தொடர்பில் அவதானத்தை செலுத்துமாறு இதன்போது உரிய பிரதேச செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் மாவட்டத்தில் முறைமைப்படுத்தப்படாத நுண்நிதி நிறுவனங்களில் பெண்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக கடன்களை பெறுவதனால் ஏற்படும் சமூகப்பிரச்சினைகள் குறித்தும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
இவற்றை ஒழுங்குபடுத்தல் மற்றும் மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்க வேண்டியதன் தேவைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
மனித உரிமை ஆணைக்குழுவுக்கு ஆதிவாசிகளது பிரச்சினைகள், நுண்நிதி செயற்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள சமூகப்பிரச்சினைகள் குறித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் நிலவரங்களை அறியும் நோக்கில் திருகோணமலைக்கு கள விஜயம் மேற்கொண்டாதாக இதன்போது கருத்துரைத்த மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் டொக்டர் நிமல் கருணாசிரி தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ் .அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) எஸ் . சுதாகரன், வெருகல் பிரதேச செயலாளர் எம். ஏ. அனஸ், சூம் செயலியூடாக மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
District media unit
Trincomalee