`ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0′ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கஞ்சா விற்பனை தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், கஞ்சா விற்பனை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. இந்த நிலையில், சென்னை தாம்பரம் பகுதிக்கு அருகில் உள்ள சேலையூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை அடுத்து, மதுவிலக்கு காவல்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது, அந்தப் பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் தங்கியிருந்த இடத்தில் சோதனை செய்ததில் 4.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆந்திராவைச் சேர்ந்த நான்கு கல்லூரி மாணவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவிலிருந்து ரகசியமாகக் கொண்டுவரப்படும் கஞ்சாவை இவர்கள் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. ஒரு சில சமயங்களில் இவர்களே ஆந்திராவுக்குச் சென்று கஞ்சாவை வாங்கிவந்து விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சேலையூர் பகுதி போலீஸார் அந்த நான்கு பேர்மீதும் வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.