இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை இந்தியர் ஆளப்போகிறாரா?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்தியாவை சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது இங்கிலாந்து. ஆனால், காலச்சக்கரம் இப்போது இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தை ஆட்சி செய்யும் காலமும் கணிந்துள்ளது. ஆம், இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனக், பிரதமராக வர வாய்ப்புடன் உள்ளார்.

பிரிட்டனின் பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அவர் மீது, கொரோனா காலத்தில் மது விருந்து கொடுத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த மாதம் பார்லிமென்டில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து தப்பினார். இந்நிலையில் கட்சியின் துணை தலைமை கொறடாவாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட எம்.பி., கிறிஸ் பின்சரை நியமித்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்படவே, போரிஸ் ஜான்சனுக்கு கட்சியில் எதிர்ப்பு அதிகரித்தது.

latest tamil news

போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இந்தியாவை பூர்வீகமாக உடைய ரிஷி சுனக், பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய சாஜித் ஜாவித் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களை தொடர்ந்து மேலும் சில அமைச்சர்கள், எம்.பி.,க்கள் என, 50 பேர் ராஜினாமா செய்துள்ளனர். கட்சியில் எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, பிரதமர் பதவி ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும்வரை, காபந்து பிரதமராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் கன்சர்வேடிங் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது செப்டம்பர் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்று கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. இதில் இந்திய வம்சாவளியும் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் அடுத்த பிரதமராக அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர் தான் தற்போதைய நிலையில் கட்சியில் செல்வாக்குமிக்க நபர் ஆவார். ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டால், இங்கிலாந்தை இந்தியர் ஒருவர் ஆளும் பெருமையை பெறுவார். சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை, இந்தியர் ஒருவர் தன் திறமையால் வளர்ச்சியடைந்து ஆளப்போவது இந்தியாவிற்கே பெருமை என்பது மறுப்பதற்கில்லை.

latest tamil news

யார் இந்த ரிஷி சுனக்?

இங்கிலாந்து பிரதமர் ஆகும் வாய்ப்பில் முன்னிலையில் உள்ள ரிஷி சுனக்கின் பூர்வீகம் இந்தியா. இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றார். மேலும் இவர், ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015ல் எம்.பி.,யாக முதன்முறையாக இங்கிலாந்து பார்லிமென்ட்டிற்கு தேர்வான இவர், 2020 பிப்ரவரியில் அந்த நாட்டின் நிதி அமைச்சரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.