இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட யூரியா உரமானது இலங்கையின் நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்றது என தேசிய உர செயலகம், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசினால் வழங்கப்பட்ட யூரியா உரம் தொடர்பில் தேசிய உர செயலகம் இலங்கையில் தரநிலை அறிக்கையை பெற்று, அதன் பிரகாரம் உர மாதிரிகளை இலங்கையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் உள்ள பையூரேட் சதவீதம் குறித்த அறிக்கையை பெற்றுக்கொண்டது.
இந்த யூரியா உரத்தின் பையூரேட் சதவீதம் 0.9% எனவும், இலங்கையில் பயன்படுத்தப்படும் யூரியாவின் பையூரேட் சதவீதம் பொதுவாக 1% அளவில் இருப்பதால் இந்திய உரத்தை பயிர் செய்கைக்கு பயன்படுத்துவதில் சிக்கல்கள் இல்லை எனவும் தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த உரம் தொடர்பாக 03 சர்வதேச ஆய்வுகூட அறிக்கைகள் பெறப்பட்டது, மேலும் அந்த அறிக்கைகளில் சதவீதம் 0.65% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த உரத்தை நெல், சோளம் உட்பட ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கும் பயன்படுத்த, லங்கா கொமர்ஷல் உர நிறுவனம் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சேவை மத்திய நிலையங்களுக்கு இன்று முதல் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.