வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு : இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனா கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனிடையே, இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதனால், அங்கு அவசர நிலையை அமல்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். அவர் பதவி விலக வலியுறுத்தி, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடக்கிறது. அப்போது சிலர் அவரது வீட்டிற்குள் ஏறி குதித்தனர். பிரதமர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவையும் உடைக்கும் முயற்சி செய்தனர். இதனால், அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை அகற்ற பாதுகாப்பு படையினர் முயற்சி செய்தனர். தண்ணீர் பீய்ச்சியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கொழும்புவில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் வானத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் உலா வருவதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இடைக்கால ஜனாதிபதி
இதனிடையே, இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யாமல், மாலத்தீவு சென்ற நிலையில், அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டு உள்ளதாக மகிந்த யாபா அபேவர்தனா கூறியுள்ளார். இடைக்கால அதிபராக ரணிலை நியமித்துள்ளதாக, கோத்தபய தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டிவி ஒளிபரப்பு நிறுத்தம்
இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில், அந்நாட்டின் தேசிய சேனலான ரூபவாகினி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதனையும் போராட்டக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement