உக்ரைனில் இருந்து தானியங்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பொருட்டு துருக்கி, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் இராணுவ பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பானது புதன்கிழமை இஸ்தான்புல் நகரில் முன்னெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
குறித்த தகவலை துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை தொட்டதை அடுத்து இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மன்றம், ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இணைந்து துருக்கி முக்கிய பங்காற்றி வருகிறது.
ரஷ்யா முன்னெடுத்த போருக்கு பின்னர் உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்ய போராடி வருகிறது, பல துறைமுகங்கள் அதன் தெற்கு கடற்கரையில் போர் மூண்டதால் முடக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தானியங்களை கொள்ளையிட்டு தங்களின் நட்பு நாடுகளுக்கு ரஷ்யா விற்பனை செய்து வருவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது.
ஆனால் ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனிடையே உக்ரைன் தானியங்கள் தொடர்பில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டியது உலக நாடுகளின் தேவை என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.