புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 63 பேர் குற்றமற்றவர்கள் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பொய் தகவல்கள் அளித்ததாகவும், ஆதாரங்களை திரட்டியதாகவும், தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை மனித உரிமை அமைப்புகள், சிவில் சொசைட்டி அமைப்பினர் விமர்சித்தனர். இந்நிலையில் இதைக் கண்டித்து 13 முன்னாள் நீதிபதிகள் மற்றும் 90 முன்னாள் உயர் அதிகாரிகள் 87 முன்னாள் ராணுவ அதிகாரிகள் என 190 பேர் அடங்கிய குழு, நீதித்துறையில் தலையீடு ஏற்ககூடியது அல்ல என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீஸ்தா சீதல்வாட் மற்றும் பலர் மீது சட்டப்படிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இதுகுறித்த சிவில் சொசைட்டி அமைப்பினரின் விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவர்கள் தீஸ்தா சீதல்வாட்,பொய் ஆதாரங்களை திரட்டியமுன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் பாதகமாக கருத்தை நீக்க வேண்டும் என நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்துள்ளனர்.
நீக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மக்கள் முற்றிலும் அதிருப்தியடைந்துள்ளதாக சிவில் சொசைட்டி அமைப்பினர் நடிக்கின்றனர். சட்ட விதிமுறைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் முயற்சிதான் மக்களை அதிருப்தியடைச் செய்துள்ளது. சட்டத்துக்குஉட்பட்டு நடக்கும் மக்கள், நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த எந்தகருத்துக்களையும் நீக்க கூடாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.