விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 9-ந்தேதி காலை 11 மணிக்கு பாலவநத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வெள்ளாடுகளை வழங்கினார்.
அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். தொடர்ந்து சிலர், தங்களின் கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் வழங்கினர். அப்போது, முதியோர் பென்ஷன் கேட்டு மனு கொடுக்க வந்த பெண்ணை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மனு அடங்கிய கவரால் தலையில் அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்காட்சிகள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பதவி விலகாவிட்டால் பா.ஜ.க. சார்பில் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம் எனக்கூறியிருந்தார். இந்த விவகாரம் விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் விசாரித்ததில், அந்த பெண், விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்தை சேர்ந்த கலாவதி(45) திருமணமாகாதவர். கலாவதியின் தந்தை மற்றும் தாய் பத்மாவதி ஆகியோர் வயது முதிர்ச்சியின் காரணமாக வீட்டில் உள்ளனர். தான், தினக்கூலி வேலைக்கு சென்று வருவதில் கிடைக்கும் பணம் பெற்றோர்களை பராமரிக்க போதுமானதாக இல்லாததால் தனது தந்தைக்கும் தாய்க்கும் முதியோர் உதவித்தொகை வழங்கிட ஆவனச்செய்யுமாறு கேட்டு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அப்பெண் மனு அளித்தார்.
சாதாரணமாக, மன அழுத்ததுடன் இருக்கும் கலாவதி, அனைவரிடமும் சற்று அதிகமாக பேசக்கூடியவர். இந்தநிலையில், தனது பெற்றோருக்கு முதியோர் உதவித்தொகைக்கேட்டு பல நாள்களாக அலைந்தும் பலனளிக்காத காரணத்தால் அமைச்சரை நேரில் சந்திக்கையில் கடகடவென பேசினார். அப்போது தான், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அப்பெண்ணை தலையில் தட்டி அமைதிப்படுத்தினார்” என்றனர்.
இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனிடம் பேசினோம். “எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக நான் அரசியலில் இருப்பவன். நான் எப்படிப்பட்டவன் என்பது என் தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். அனைவரிடத்திலும் அன்போடு பழகக்கூடியவன். வேற்றுமை பாராதவன். தகுதி பார்த்தோ, தரம் பார்த்தோ பழகமாட்டேன். எல்லோரையும் சமமாகவே மதித்து இப்போது வரைக்கும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். என் தொகுதி மக்களும் என்னை மாமா, தாத்தா என்று முறை சொல்லி பழகி வருகின்றனர். பாலவநத்தத்தில் நடைபெற்ற வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் என்னை சந்தித்த கலாவதி, எனக்கு உறவினர் பெண்.
பொதுவாக அனைவரிடமும் அமைச்சர் என்ற அந்தஸ்தோடு பழகாமல் அவர்களுக்குள் ஒருவனாகவே பழகுவது தான் எனது இயல்பு. அந்த உரிமையில் தான் அவர்கொடுத்த மனு கவரை வைத்தே கலாவதியை உரிமையோடு தலையில் தட்டி அமைதிப்படுத்தினேன். நான் தொகுதி மக்களிடம் உரிமையெடுத்து பழகியதை ஏற்க முடியாமல் பா.ஜ.க.வின் அண்ணாமலை இதை அரசியலாக்க பார்க்கிறார். இதனால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. அரசியலில் எனக்கு இருக்கும் அனுபவம் அண்ணாமலையின் வயதுகூட கிடையாது. ஒரே தொகுதியில் 9 முறைக்கும் மேல் மக்கள் சேவகனாக பணியாற்றும் என்னைப்பற்றி, என் தொகுதி மக்களுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்கு தெரியும். நான் யார் என்பது அண்ணாமலை வந்து சொல்லித்தான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டியதில்லை” என்றார்.