உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ஒருவர் தன் மருமகளுடன் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த புதன்கிழமை 21 வயது பெண் ஒருவர் அந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு ஹோட்டல் வேலை முடிந்து அந்தப் பெண் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது ஹோட்டல் உரிமையாளர் அந்தப் பெண்ணை தன்னுடன் காரில் வருமாறும், வீட்டில் விட்டுவிடுவதாகவும் கூறி வற்புறுத்தியுள்ளார். அதனால் அந்தப் பெண்ணும் காரில் ஏறியுள்ளார்.
கார் நகரத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹோட்டல் உரிமையாளர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பெண் மறுத்தும், எச்சரித்தும் அவர் அத்துமீறலைத் தொடர்ந்துள்ளார். இதனால் அந்தப் பெண் அவரிடமிருந்து தப்பிக்க ஓடும் காரிலிருந்து ஜனேஷ்வர் மிஸ்ரா பார்க் அருகே கதவை திறந்துகொண்டு குதித்திருக்கிறார். அதில் படுகாயமடைந்த அந்தப் பெண்ணை சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய லக்னோ காவல்துறை உயர் அதிகாரி, “குற்றம்சாட்டப்பட்டவர் இரண்டு மணி நேரத்திற்குள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர்மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் ஓட்டி வந்த காரையும் கைப்பற்றியுள்ளோம். மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவரின் அழைப்பு விவரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.