ஒற்றைத் தலைமை விவகாரம் அ.தி.மு.க-வில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தில் நடைபெற்ற அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகி இல்ல காதணி விழாவிற்கு இன்று வந்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, குழந்தைகளை வாழ்த்திவிட்டு பேசியவர், “நான் இடைக்காலப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கலந்துகொண்ட முதல் கழகத்தின் நிகழ்ச்சி இதுதான். நான் இடைக்காலப் பொதுச்செயலாளராக வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, கழக நிர்வாகி ரவிவர்மனின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன் என்றும் நினைக்கவில்லை. இதெல்லாம் இறைவனாக கொடுத்தது!
புரட்சித் தலைவி அம்மா, இறைவனாக வந்து நமக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அ.தி.மு.க பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் அவர்களுடைய காலத்தில் பல இன்னல்கள், துன்பத்திற்கு ஆளாகி, போராடித்தான் வெற்றி பெற்றார்கள். இரு பெரும் தலைவர்களும் எப்படி போராடி வெற்றி பெற்றார்களோ… அப்படித்தான் இப்போதும் நிகழ்கிறது. வெற்றி உறுதி, அது நிச்சயம். அந்த இரு பெரும் தலைவர்கள் வழியில் நாம் பயணிக்கிறோம். அவர்கள் எப்படி அ.தி.மு.க அரசை உருவாக்கி தந்தார்களோ… அதேபோல இங்கே இருக்கின்ற உண்மையான விசுவாசிகளின் உழைப்போடு நிச்சயமாக அ.தி.மு.க ஆட்சி அமையும்.
நம்மிடையே சிலபேர் எட்டப்பர்களாக இருந்தார்கள். இன்றைக்கு அவர்களுடைய முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது. நம்முடன் இருந்துகொண்டே அ.தி.மு.க இயக்கத்தை வலுவிழக்கச் செய்தார்கள், பலவீனமடையச் செய்தார்கள். நாம் 2021-லேயே வெற்றி பெற்றிருக்க வேண்டும். இப்போதுதான் தெரிகிறது, நம்மோடு இருந்துகொண்டே சூழ்ச்சி செய்து வெற்றியை தடுத்தவர்கள், இன்றையதினம் அ.தி.மு.க கட்சியை பிளக்க பார்க்கிறார்கள். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க-வை பிளக்க முடியாது.
இது உயிரோட்டமுள்ள கட்சி; அ.தி.மு.க தொண்டர்கள் உழைத்து உருவாக்கிய கட்சி; இது உழைப்பால் உயர்ந்த கட்சி; உழைப்பால் ஆட்சிக்கு வந்த கட்சி..! ஆகவே, ஸ்டாலின் அவர்களே! எங்களுடன் இருந்த எட்டப்பர்களை வைத்து எங்களை வீழ்த்த நினைக்கிறீர்கள். ஒரு போதும் அது நடக்காது. தர்மம், நீதி, உண்மைதான் வென்ற சரித்திரம் உண்டு. அது நிச்சயமாக வெல்லும்” என்றார்.