ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் திறனை ராணுவம் குறைத்து விட்டது; அமெரிக்க அதிபர் பைடன்

வாஷிங்டன்,

சிரியாவின் வடமேற்கே ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், டாப் 5 ஐ.எஸ். தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகல் கொல்லப்பட்டு உள்ளார்.

இதேபோன்று, நடந்த மற்றொரு தாக்குதலில், அல்-அகலுடன் நெருங்கிய தொடர்புடைய ஐ.எஸ். மூத்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். எனினும், இந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் யாரும் கொல்லப்படவில்லை என தொடக்க கட்ட ஆய்வு தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலால், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் தோல்வி உறுதி செய்யப்பட்டு உள்ளது என அமெரிக்க மத்திய படையினரின் செய்தி தொடர்பாளர் ஜோ பக்கினோ தெரிவித்துள்ளார்.

அல்-அகல், சிரியாவில் செயல்பட்ட பயங்கரவாத குழுவின் மூத்த தலைவராக இருந்ததுடன் மட்டுமின்றி, ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு வெளியேயும் ஐ.எஸ். நெட்வொர்க் அமைப்பு வளர்ச்சி அடைவதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரின் இந்த படுகொலையால், சர்வதேச அளவில் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதற்கான பயங்கரவாத அமைப்புகளின் திறனில் இடையூறு ஏற்படும் என அமெரிக்க படை தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அமெரிக்க அதிபர் பைடன் கூறும்போது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மெஹர் அல்-அகலை வான்வழி தாக்குதலில் வீழ்த்தியதில், நம்முடைய அமெரிக்க ராணுவத்தின் ஆண், பெண் மற்றும் நமது நுண்ணறிவு சமூகத்தினர் வெற்றியடைந்து விட்டனர்.

அகலின் மரணம், சிரியாவின் முக்கிய பயங்கரவாதியை களத்தில் இருந்து நீக்கியுள்ளது என குறிப்பிட்ட பைடன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் திட்டமிடல், வளம் மற்றும் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான திறனை அமெரிக்க ராணுவம் குறைத்து உள்ளது என கூறியுள்ளார்.

அமெரிக்கா பிப்ரவரியில் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஒட்டுமொத்த தலைவர் கொல்லப்பட்ட நிகழ்வை, நினைவுகூர்ந்த பைடன், அமெரிக்கா மற்றும் உலக அளவில் அதன் விருப்ப பகுதிகள் மீது மிரட்டல் விடுத்த அனைத்து பயங்கரவாதிகளுக்கும் ஒரு சக்தி வாய்ந்த தகவலை அனுப்பியுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த வான்வழி தாக்குதல் நமது ஆயுத படைகளின் தைரியம் மற்றும் திறமைக்கான ஒரு சான்றாக நிலைத்திருக்கிறது என்றும் பைடன் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.