கரூர் மாநகரப் பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாயி தாயார் ஆலயத்தில் ஆஷாட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயார் உற்சவர் மற்றும் மூலவருக்கு எண்ணெய் காப்பு சாத்தி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைபழச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு பொருள்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயாருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, வெள்ளி கிரீடம் சாத்தி அலங்கரித்தனர். சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு விசேஷ பூஜை நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவர் ஸ்ரீ பண்டரிநாதன் மற்றும் ரகுமாயி தாயாரை ஆலய மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆலயக் கருவறைக்குச் சென்று, சுவாமியைத் தொட்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆஷாட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கருவறைக்குச் சென்று சுவாமியைத் தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி, கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பெருமாள் கோயில்களில் ஆஷாட ஏகாதரி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வந்தாலும், தொடர்ந்து 100 ஆண்டு காலமாக ஆஷாட ஏகாதசியை இந்த முறையில் கரூர் பண்டரிநாதன் கோயிலில் கொண்டாடிவருவது இங்குள்ள பக்தர்களுக்கு ஆன்மிக பரசவத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
வழக்கமாகக் கோயில் கருவறைக்குச் செல்ல ஆலயத்தின் சிவாச்சார்யர், பட்டாச்சார்யர், பூசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில ஆஷாட ஏகாதசி நாளில் மட்டும் இந்த ஆலயத்தில் அனைத்து பக்தர்களும் கருவறைக்குச் சென்று சுவாமித் தொட்டு தரிசிக்கலாம் என்ற உத்தரவு பக்தர்களை பரசவப் படுத்துவதாக உள்ளது. அதேபோல், முதல்நாள் இரவு 10 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 10 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால், ஆலயத்தின் சார்பாக சிறப்பான முறையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பின்னர், அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அன்று இரவு உற்சவர் பண்டரிநாதன், ரகுமாயி தாயார் திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.