புதுடெல்லி: கலவரத்தில் ஈடுபடுவோரின் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்களில் கலவரங்களில் ஈடுபடுவோரின் வீடுகள், கடைகளை புல்டோசர் மூலமாக, இந்த மநில அரசுகள் இடித்து வருகின்றன. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை மட்டுமே குறிவைத்து ஒரு தலைப்பட்சமாக இந்த இடிப்பு நடவடிக்கைககள் எடுக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கும்படி, இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை கடந்த முறை விசாரித்த உச்ச நீதிமன்றம், உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரப் பிரதேச மாநகராட்சி நிர்வாகங்களின் முடிவில் தலையிட்டு அதனை தடை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது மாநகராட்சி நிர்வாக அதிகாரத்தில் தலையிடுவதாக அமைந்துவிடும்,’ என தெரிவித்தனர். மேலும், இதே போன்ற கோரிக்கைகள் கொண்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, ஆகஸ்ட் 10ம் தேதி விசாரிப்பதாகவும் அறிவித்தனர்.